
அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
சமீப நாட்களில் சென்னை மற்றும் சுற்றுபுரங்களில் எங்குமே ஒரு தமிழ் காமிக்ஸ் கூட வாங்கமுடிவதில்லை என்பது பலருக்கும் தெரியும். குறிப்பாக பெரும் வேட்டைக்காரர்கள் கூட ஓரிரு புத்தகங்களை கூட வாங்க முடிவதில்லை. ஆனால் சென்னையிலும் அதன் சுற்றுபுரங்களிலும் காமிக்ஸ்கள் கண்டிப்பாக கிடைக்கின்றன. அப்படி கிடைக்கும் காமிக்ஸ் புத்தகங்கள் எங்கு செல்கின்றன? அவற்றை வாங்குவது யார்? யாருக்கும் தெரியாமல் பதுக்கி வைப்பது யார்? என்று எழும் பல கேள்விகளுக்கு விடை அளிக்கவே இந்த காமிக்ஸ் குற்றம் - நடந்தது என்ன? பதிவு 1.
இன்ஸ்பெக்டர் இன்பராஜ் (பல குற்றங்களை அரிக்கேன் / லாந்தர் விளக்குகளை கொண்டு வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர்) அவர்களிடம் இந்த காமிக்ஸ் பதுக்கலை கண்டுபிடிக்குமாறு ஒரு அசைன்மென்ட் கொடுத்து இருந்தோம். அதன்படியே அவரும் மாறுவேடங்களில் எல்லாம் சென்று காமிக்ஸ் திருத்தலங்களில் எல்லாம் சென்று (அதாங்க, காமிக்ஸ் விற்கும் கடைகள்) பலநாட்கள் விசாரித்து ஒருவழியாக உண்மையை கண்டுபிடித்தார்.
என்ன அநியாயம் சார் இது? வேறு ஊரை சேர்ந்த யாரோ ஒருவர் ஒவ்வொரு மாதமும் சென்னைக்கு வந்து சென்னையில் கிடைக்கும் பல நூறு அரிய காமிக்ஸ் புத்தகங்களை கொள்ளையடித்து, அதனை பதுக்கி செல்கின்றனர். ஆனால் சென்னையில் இருக்கும் பல காமிக்ஸ் ரசிகர்கள் தமிழ் காமிக்ஸ் கிடைக்கவில்லை, தமிழ் காமிக்ஸ் கிடைக்கவில்லை என்று அவதிப்படுகிறார்கள். இந்த கொடுமைகளுக்கு வழியே இல்லையா?
புத்தகங்களை பதுக்கும் அந்த நபர் யார் என்பதை நேரிடையாக சொல்ல இயலாவிட்டாலும் கூட அவரை பற்றிய சிறிய தகவல் ஒன்றினை அளிக்கிறேன், முடிந்தால் கண்டுபிடித்து கொள்ளவும். அந்த காமிக்ஸ் பதுக்கல் பேர்வழி கோவில் மாநகரை சேர்ந்தவர். சென்னைக்கு மாதம் ஒரு முறையாவது வருபவர்.
அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க வெகு விரைவில் காமிக்ஸ் கிசுகிசுவுடன் திரும்பி வருகிறேன்.